"மனிதம் வளர்கிறது என்றால்
            இலக்கியம் வளர்கிறது;
            மனிதம் தாழ்கிது என்றால்
            இலக்கியம் தாழ்கிறது
            என்று அர்த்தம்!"

- பரிணாமன் நேர்காணல் (இனிய உதயம் மாத இதழ்  ஜூன் 2008)

           "பாரதி பிடித்த தேர்வடம்
            நடுவீதி கிடக்கிறது" அதை
            பற்றிப் பிடித்து இழுப்பதற்கு
            ஊர்கூடித் தவிக்கிறது
            நம்பிக்கை வைத்து
            நெம்புகோல் எடுத்து
            நடப்போம் வாருங்கள்
            நாம் நடந்தால் தேர் நடக்கும்
            இல்லை வெயில் மழையில் கிடக்கும்.'

    "கட்டுடையாத மரபின் பின்னலும், புதுக்கவிதையின் எழுச்சிமிகு உணர்ச்சியும் இரண்டறக் கலந்திருக்கும் இக்கவிதையை எழுதியவர் மற்றொரு பாவேந்தர் என்று சிறப்பிக்கப்படும் கவிஞர் பரிணாமன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இளமையிலேயே கட்டிடத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் முற்போக்குக் கவிஞராகவும், தமது கவிதைகளை இலக்கிய மேடைகளில் பாடும் பாடகராகவும் தமிழகத்துக்கு அறிமுகமானவர். தொடக்கக் கல்வியைக்கூட முழுமையாகக் கற்க முடியாத இவருக்கு, யாப்பும் கவிதையும் இயற்கையாய் இவரது கவியுள்ளம் அணிந்திருந்த வைரக் காப்பு என்றால் அது மிகையில்லை.

    பரிணாமனின் கவி ஆளுமைக்கு, பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, 'தமிழ் ஒளி' கே.சி.எஸ். அருணாசலம் ஆகியோருக்கு இணையான சொல்லாட்சியும்; புரட்சிகர முற்போக்குக் கவிதைகளுக்கு அப்பால் இவர் பாடாத பாடு பொருட்கள் சிலவே உண்டு என்று சொல்லும் விதமாக கம்யூனிஸம், காதல் இரண்டையும் ஒப்பிட்டுக்கூட ரசமான கவிதை படைத்திருக்கிறார் என்பதுமே சாட்சியாக நிற்கின்றன. தற்போது சென்னையில் வசித்துவரும் பரிணாமனின் கவிதைகள் மொத்தமும் ஒரே தொகுப்பாக 'பரிணாமன் கவிதைகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ளன, தற்போது எட்டயபுரத்தில் மணிவிழா கண்டிருக்கம் இந்த சிவப்புக் கவிஞரை 'இனிய உதயத்'திற்காக சந்தித்தபோது...

    எத்தனை வயதில் முற்போக்கு இயக்கங்கள்மீது ஈடுபாடு ஏற்பட்டது? ஏன்?

    "எனது பால்யத்தில் நான் அதிகம் பார்த்த வண்ணம் சிவப்பு தான். அதற்குக் காரணம் நான் பிறந்து வளர்ந்த வாழ்விடம் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிற செல்லூரில்தான் எங்கள் வீடு இருந்தது. எங்கள் பகுதியில் நெசவை ஜீவாதாரத் தொழிலாக வரித்துக் கொண்ட சௌராஷ்டிர மக்கள் அதிகம் வாழ்ந்து வந்தார்கள். இதனால் கைநெசவுத் தொழிலாளர்கள் சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கே ஒருங்கே வளர்ந்தன. எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, என் வாழ்வின் திசையில் ஒரு மாற்றம். பக்கத்து வீட்டில் என் வயதையொத்த பெண் இருந்தாள். அவளது பெயர் மாரியம்மாள். எந்நேரமும் அவள் திண்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பாள். இதை ஏக்கத்தோடு நான் பார்த்துக் கொண்டிருப்பேன். 'உனக்கு மட்டும் ஏது இத்தனை பணம்?' என்று ஒரு நாள் அவளிடம் கேட்கவே செய்து விட்டேன். அவளோ, 'என்னோடு சித்தாள் வேலைக்கு வந்தால், உனக்கும் தினசரி ஏழணா சம்பளம் கிடைக்கும். பிறகு நீயும் என்னைப்போல்  விரும்பிய பண்டங்களை வாங்கிச் சாப்பிடலாம். ஆனால் பள்ளிக்கூடம் போவதை நிறுத்தினால்தான் என்னுடன் வேலைக்கு வரமுடியும்' என்று சொன்னாள். உடனே எனது ஐந்தாம் வகுப்புப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு மதுரை கடைவீதிக்கு  வந்தேன். அங்கே பழைய புத்தகக் கடையொன்றில் பாடப் புத்தகங்களை விற்றுவிட்டு, இம்பீரியல் திரையரங்களில் ஒரு கருப்பு - வெள்ளை திரைப்படம் பார்த்தேன். படம் முடித்து வெளியே வந்து, வயிறு முட்ட ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினேன். அடுத்த தினத்திலிருந்து பள்ளிக்கூடம் செல்வதை விட்டுவிட்டு சித்தாள் வேலைக்குப் புறப்பட்டேன். இப்போது மதுரை அரசு பொது மருத்துவமனையாக இருக்கும் ராஜாஜி மருத்துவமனையின் கட்டு மானம் நடந்து கொண்டிருந்தது. அதிலே கருங்கற்களைத் தலையில் சுமந்து செல்லும் கட்டிடத் தொழலிளியாக அத்தனை பிஞ்சு வயதிலே எனது வாழ்க்கைப் பயணம் தொடங்கியது.

    எனது பதினெட்டாவது வயதில் ஒரு எண்ணம் தோன்றியது. இத்தனை கொடிய வெயிலில், இவ்வளவு கடுமையான வேலையைச் செய்ய வேண்டுமா? இதற்கு ஒழுங்காகப் படித்திருக்கலாமே என்று தோன்றியது. அதன்பிறகும் தொடர்ந்து கட்டிடத் தொழிலாளியாக வாழ்க்கை இருந்த போதும், வேலை முடிந்தபிறகு இயக்கத் தோழர்களைச் சந்திக்க ஆரம்பித்தேன். இந்த சந்திப்புக்கள் எனக்கு மன ஆறுதலையும் உத்வேகத்தையும் தந்தன. 1964-ஆம் ஆண்டு ஜீவா அவர்கள் தோற்று வித்த கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாடு, மதுரை சேதுபதி பள்ளியில் நடைபெற்றது. அங்கே இன்று இசைஞானியாக இருக்கும் இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்கள், தமது தம்பிகள் பாஸ்கரன், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோருடன், அமரர் ஜீவாவின் பெரிய ஓவியம் தீட்டப்பட்ட மேடையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார். 'இன்னும் கொஞ்சம் நாளிருக்கக் கூடாதா? ஜீவா' எந்தன் உள்ளம் ஆனந்ததத்தில் ஆடாதா?' என்று பாவலர் பாடிய கம்பீரமான காட்சி எனது உள்ளத்திலே அழுத்தமாகப் பதிந்தது. அந்த மாநாட்டின் தொடர்ச்சியாக மதுரை செல்லூர் களத்துப் பொட்டலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கும் போனேன். அங்கே அமரர் தொ .மு.சி. ரகுநாதன், மகாகவி பாரதியாரைப் பற்றி ஒரு மணி நேரம் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றியதை இமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த மகத்தான சொற்பொழிவுதான் என் வாழ்வை மாற்றியமைத்தது. அந்தக் கணம் முதலே என்னை கம்யூனிஸ்ட் இயக்கம் வசீகரித்துக் கொண்டது. பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்த போது எனது பத்தொன்பது வயது தொடங்கி பதினைந்து ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தேன். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளராக இருக்கும்  தோழர் து. ராஜா, முப்பால் மணி, தி.சு.நடராஜன், உலகநாயகம், நவபாரதி, பொன்மணி, சந்திரபோஸ், செண்பகா பதிப்பகம் ஆர்.எஸ். சண்முகம், 'இந்து' துரைராஜ், வேல்முருகன் போன்ற முற்போக்குவாதிகளை அங்கே எனது தோழர்களாக வரித்துக் கொண்டு நான் உருவாக்கம் பெற்றேன்."

    நீங்கள் கலை இலக்கியப் பெருமன்ற மதுரை மாவட்டக் கிளையின் செயலாளராகச் செயல்பட்டது இந்தத் தருணத்தில்தானா? அங்கிருந்த படியே 'மகாநதி' என்ற சிற்றிதழையும் நடத்தினீர்கள் இல்லையா?

    "ஆமாம்! இலக்கியம் குறித்து குறுகிய பார்வை வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகளை அழைத்து, மாதந்தோறும் ஒரு இலக்கியக் கூட்டத்தை ஒரு விழாவாக நடத்துவோம். இதில் கவிதை, கதை, கட்டுரைகள் வாசிக்கத் திரண்டு வந்த இலக்கியவாதிகள், இளம் படைப்பாளிகள் மதுரை கலை இலக்கியப் பெருமன்றத்தை ஒரு பொதுவான இலக்கிய தளமாகவே பார்த்தார்கள். தனுஷ்கோடி ராமசாமி, ஜெயந்தன், பா. செயப்பிரகாசம், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன் என்று நோக்கமும் லட்சியமும் வேறுபட்ட பல படைப்பாளிகள் இங்கே சங்கமித்தார்கள். அப்போது 'மகாநதி' என்ற இருமா இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினோம். எனது சக தோழர்கள் எல்லோரும் அரசுப் பணியில் இருந்த காரணத்தினால் 'மகாநதி' இதழின் ஆசிரியராக இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மொத்தம் பன்னிரண்டு இதழ்கள் வெளிவந்தன. அதை முழுக்க முழுக்க பாரதியின் பார்வை கொண்டதாக - பொதுவுடமை இயக்கத்தின் பார்வை கொண்டதாக நடத்தினோம்."

    உங்களது கவிதை முயற்சிகளை எப்போது தொடங்கினீர்கள்? ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியே எழுதப் படிக்கப் போதுமானதாக இருந்ததா?

    "கவிஞன் என்பவன் உருவாவதில்லை. அவன் பிறக்கிறான் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். காரணம். எந்த இயக்கத்தையும் சாராத பதினைந்து வயதிலேயே, கண்முன் நிகழும் சம்பவங்களை எதுகை மோனையுடன் எடுத்துக்கட்டி வார்த்தைகளில் வடிவமைக்கும் ஆற்றல் என்னிடமிருந்தது. எனது தாத்தா சித்தர் பாடல்கள், இதிகாசங்கள் போன்ற புத்தகங்களை வாங்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்து செல்வார். கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி படிப்பார். அவருக்குத் தெரியாமல் அவரது புத்தகங்களை வாசித்தேன். அவரைப் போலவே நானும் புத்தகத்தை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு நடந்து பார்ப்பேன். பிறகு நான் கட்டிடத் தொழிலாளி ஆனபிறகு, எனது பதினெட்டாவது வயது முதல் நூலகங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்ன். மாதத்தில் பதினைந்து நாட்கள் வேலைக்குச் செல்வது, எஞ்சிய நாட்களில் நூலகங்களுக்குச் சென்று படிப்பது என்று வாசிப்பின்மீது தீவிரக் காதல் கொண்டேன். இது வீட்டுக்குத் தெரிந்துபோய் அப்பா என்னை நையப்புடைத்து, 'கூலிக்காரனுக்கு கூறுகெட்டுப் போச்சா' என்று வசைபாடினார்.

    உண்மையில் நூலகத்தின் வழியாக நான் பாரதியையும் பாரதிதாசனையும் முழுமையாகப் பயின்ற பிறகு எனது கவிதையறிவு மேலும் கூர்பெற்றது என்பதைவிட ஒளி பெற்றது என்றே சொல்ல வேண்டும். பாரதி, பாரதிதாசனை முழுமையாகப் பயின்ற பிறகு நவீன இலக்கியத்தின்பால் எனது கவனத்தைத் திருப்பினேன். அன்று நவீன இலக்கியம் என்றால் முதலில் வருபவர் டாக்டர் மு. வரதராசனார்தான். அவரில் தொடங்கி இலக்கிய சிற்பி ஜெயகாந்தன், அதன்பின் சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், லா.ச.ரா, க.நா. சுப்ரமணியன் என்று இருவது வயதிற்குள்ளாகவே நவீன இலக்கியப் படைப்பாளிகளைப் படித்து முடித்து, மறுவாசிப்பும் செய்தேன். இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எனது இருபத்து இரண்டாவது வயதில் ஈரோட்டில் கட்டிடத் தொழிலாளியாக ஆறு மாத காலம் பணிபுரிந்தேன். அப்போது அங்கேயிருந்த ஒரு பழைய புத்தகக் கடையில் மொத்த புதுமைப் பித்தனையும் கண்டுபிடித்துப் படித்தேன். அதன் விளைவாக 1975-ல் 'ஆகஸ்டும் அக்டோபரும்' என்ற எனது முதல் கவிதை நூலை வெளியிட்டேன்."

    பிறகு பரிணாமன் பாடல் பாடாமல் எந்த முற்போக்கு மேடைகளிலும் நிகழ்ச்சி தொடங்காது என்ற நிலையை எப்போது நிலைநாட்டினீர்கள்? கவிஞன் என்பவன் பாடகனாகவும் இருப்பதில் உங்களுக்கு முன்னோடி அல்லது ஆதர்சம் என்று யாரைச் சொல்வீர்கள்?

    "எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த தருணத்தில் சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தது. அதற்காக சென்னை வந்தேன். அந்த மாநாட்டில் இசை மேதை எம்.பி. சீனிவாசனைச் சந்தித்தேன். இந்த சந்திப்பும், இளமையிலேயே பாவலரின் பாட்டுத்திறன் ஏற்படுத்திய தாக்கமும், மகாகவி பாரதியின் கவிதைகளில் பொதிந்துகிடந்த இசைநயமும், கவிதை எழுதி அதை மெட்டுடன் பாட வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு ஏற்படுத்தின. மற்றொரு ஆளுமை கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் இவர் கவியரங்கங்களில் கலந்து கொள்ளும்போது தமது கவிதைகளை இசைப்பாடலாகப் பாடுவதைக் கண்டு மேலும் எழுச்சி கொண்டேன். பிறகு 1975-ஆம் ஆண்டு முதலே நான் கலந்து கொள்கிற கவியரங்க நிகழ்ச்சிகளில் எனது கவிதைகளை வாசிக்காமல் இசைப்பாடலாகப் பாடத் தொடங்கினேன். இதன் தொடர்ச்சியாக எட்டயபுரத்தில் நடந்து வந்த பாரதி விழாவுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் போய் வந்திருக்கிறேன். அங்கே நான் பாடிய  'பாரதி பிடித்த தேர்வடம் நடுவீதியில் கிடக்கிறது என்ற பாடல் -' என்னை புரட்சிகர கவிஞனாகவும் முற்போக்கு மேடைப் பாடகனாகவும் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது. அன்று தொடங்கிய பயணம் முப்பதாண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்கிறது."

    ஒரு கவிதை இசைப்பாடலாக மாறும்போது, அதை எழுதிய கவிஞனே மேடையில் பாடும்போது ஏற்படும் விளைவு, அதன் வீச்சு, கவிஞனுக்கு நேரும் உணர்ச்சி நிலை பற்றி உங்கள் அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்ளுங்களேன்...

    "இந்தப் பேட்டியில் என் மனதை மயிலிறகு கொண்டு வருடிக் கொடுக்கும் கேள்வியாக இதை நான் பார்க்கிறேன். என்னளவில் கவிதை என்பதையே நான் இசையாகத்தான் பார்க்கிறேன். அது சங்கத் தமிழ்க் கவிதையாக இருந்தாலும் சரி; இன்றைய நவீனத் தமிழ்க் கவிதையாக இருந்தாலும் சரி" ஒவ்வொரு கவிதையிலும் உள்ளீடாக இருக்கக்கூடிய பாடு பொருள், அதன் சொல்லாட்சி, அதன் வடிவத்தைப் பொறுத்து, ஒவ்வொரு கவிதையிலும் அதன் ஆன்மாபோல ஓர் அற்புதமான மெட்டு மறைந்திருப்பதை நான் பார்க்கிறேன். ஏன்! ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கவியரங்கங்களில், கவிதையை இசைப்பாடலாகப் பாடிக்காட்டும் வழக்கம்தான் இருந்தது வந்திருக்கிறது. அதேபோல இன்று வரை மலையாளக் கவியரங்குகளுக்கு நீங்கள் போனால் மெட்டோடு" இசைத் தொனியோடு அவர்கள் கவிதை வாசிப்பதைக் கேட்கலாம். இங்கேயும் இயல்பாக இருந்த இது மெல்ல மெல்ல வழக்கொழிந்து விட்டது. எனினும் எழுத்து வடிவிலே இருக்கிற கவிதையை ஒருவன் படித்து, அதன் மூலம் பெறுகிற உணர்ச்சியைவிட, அதை இசை வடிவாய்க் கேட்கிறபோது, அவனது சிந்தனையை நேரடியாக வருடிக் கொடுக்கிறது. அல்லது உசுப்பி விடுகிறது. அவனது மனம் எனும் ஒலிப்பதிவுக் கருவியில் நிரந்தரமாகத் தங்கி, காலந்தோறும் அவனது நடத்தையில், செயல்களில், நோக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கவிஞன் என்பவன் தமது கவிதையை வாசித்துக் காட்டுவது என்ற நிலையிலிருந்து அதைப் பாடிக் காட்டுவது என்பது உன்னதமானது - யிரானது. கவிஞன் என்பவன் ஓசை ஒழுங்கும், வார்த்தை ஜாலங்களோடும் மட்டும் வாழ்ந்துவிடாமல், இசையறிவு மிக்கவனாகவும் இருந்துவிட்டால் அவனது படைப்புக்கள் யுகங்களைக் கடந்து வாழும் அமரத்துவம் பெற்றுவிடுகின்றன. இதை பாரதியிடம் நாம் பார்க்க முடியயும். தற்போது புதுக்கோட்டையில் நடந்து முடிந்த அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்குப் போயிருந்தேன். மாநாட்டில் கொடி ஏற்றிய உடனே, சர்வதேச கீதம் என்று தமிழ்ப் பொதுவுடமை இயக்கம் போற்றும் எனது பாடலைப் பாடும்படிக் கேட்டுக் கொண்டார்கள். நல்லகண்ணு, து.ராஜா, ஏ.பி. பரதன் உட்பட அகில இந்திய தேசியத் தலைவர்கள் வந்திருந்த அந்த மாநாட்டில் நான் பாட ஆரம்பித்தேன்.

                                       எங்களைத் தெரியலையா  இந்த
                                       இசையைப் புரியலையா?

                                       திங்கள் ஒளியில் துயில்வோரே தினம்
                                       சூரியத் தீயினில் உழைப்போரே

                                      எங்களைத் தெரியலையா  இந்த
                                      இசையைப் புரியலையா?

                                       இமயமும் குமரியும் அல்லாமல்
                                       எங்கும் பரவி நிற்போம் மனித

                                       இனத்திற்கென்றே நாங்கள்
                                       புனைந்த கவிதையை 
                                       கண்டங்கள் ஐந்திலும் பாடி நிற்போம்

                                       ஜாதிமத நிற பேதம் கடந்திட்ட
                                       சத்திய புத்திரர்கள்  நாங்கள்

                                       சமுத்திரப் பின்னலின் சங்கமங்கள்
                                       எங்களைத் தெரியலையா - இந்த
                                       இசையைப் புரியலையா?
    "இந்தப் பாடலை நான் பாட ஆரம்பித்ததும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்த அந்த மைதானம் நிச்சலனமாக அமைதியில் உறைந்து கிடந்தது. இந்த அமைதி என்னை ஒரு தியான நிலைக்கு இட்டுச் சென்றது. பாடி முடித்து கண் திறந்து பார்த்தபோது தொண்டர்களிடம் மட்டுமல்ல; என்னுடலிலும் உற்சாகம், உத்வேகம், நம்பிக்கை எல்லாம் மூன்று நிமிட நேரத்தில் தட்டி உரமேற்றப் பட்டதை உணர்ந்தேன். இதுதான் பாடுகிற கவிஞனுக்கும் கேட்கிற மனிதனுக்கும் இடையிலான பரிமாற்றாம்."

    உங்களது முப்பதாண்டு கால கவியனுபவம், மேடையனுபவம் இரண்டில் எதுவாயினும், அதில் சோவியத் எனும் முன்மாதிரி உலகத்தின் முன்னேற்றம் பற்றியும், அங்கே நிகழும் அற்புதங்கள் பற்றியும் அதிகம் பாடப்பட்டிருக்கிறது. சோவியத் கட்டமைப்பு சிதறுண்டு அதற்குப் பின்னடைவு ஏற்பட்டபோது ங்கள் மனநிலை எப்படி இருந்தது? சோவியத் பின்னடைவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

    "நீங்களே அதைப் பின்னடைவு என்று மட்டும் தான் பார்க்கிறீர்கள். இந்தப் பின்னடைவை நான் ஒருபோதும் பொதுவுடமையின் தோல்வியாகப் பார்க்கவில்லை. காலவிதியால், அக்டோபர் புரட்சியை (ரஷ்ய புரட்சி) ஆதரித்து, ஆர்ப்பரித்து எழுந்த மானிட மகா சமுத்திர அலைகளில் நானும் ஓர் அலையானேன்."

    'ஓரஞ்செய்திடாமல்" தருமத்தின்
    உறுதி கொன்றிடாமல்
    ஊரை ஆளும் முறைமை" உலகில்
    ஓர்புறத்துமில்லை'

    என்று அலுத்துப் போயிருந்த மகாகவி பாரதிக்கு புதிய சோவியத் ருஷ்யா மாபெரும் நம்பிக்கை அளித்தது. அதனால்தான்.

    'மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள் "ருஷ்ய நாட்டில் ஆஹாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி'
    என மகாகவி வியந்து பாடினான். அவன் இப்படிப் பாடியதைப் படித்து, ஆதர்சத்தில் வளர்ந்தவன் நான். மகாகவிகளின் வாக்கு ஒருபோதும் பொய்க்காது என்பது என் திண்ணமான எண்ணம். மாற்றம் என்பது மாறிக் கொண்டே இருக்கக் கூடியது என்பது மார்க்ஸியத்தின் அடிப்படைகளில் ஒன்று. அந்த வகையில் அதைவிடச் சிறந்த மாற்றத்துக்காக அது மாறி இருக்கிறது. 'கடியொன்றில்' எழுந்த அச்சோவியத் குடியரசு இன்று கலைந்திருக்கிறதோ, அல்லது களைத்துப் போய்க் கிடக்கிறதோ, எது எப்படியிருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியிலும், சோவியத் யூனியன் நிகழ்த்திய நர்த்தனங்களும், அதன் செயல்பாடுகளும், அதில் கிளைத்தெழுந்த உறுதிப்பாடுகளும், அது பதித்த முத்திரைகளும் கலைந்தோ கரைந்தோ போய்விடுவன அல்ல. பிறிதின் நோய் தன் நோய்போலப் பார்க்கத் தெரிந்த பரிவால்தான் 'எழுந்து நின்ற சோவியத்தே எங்கே சென்றாய்' என்ற விசாரங்களை நாம் செய்கிறோம். இந்திய சோவியத் நட்புறவால் பரஸ்பரம் நாம் பரிமாறிக் கொண்ட பலன்களும் மேன்மைகளும் அளப்பரியனவாகும். மதப் பழமை வாதங்களின் பிடியே உலகில் இன்னும் தளர்ந்து போகாமலிருக்கும்போது, மார்க்ஸிய லெனினியச் சமதர்மத்தின்பிடி எவ்வாறு இங்கே தளர்ந்து போக முடியும்? சோவியத் புரட்சி செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சோவியத்தை வீழ்ச்சியாகப் பார்க்கிறவர்கள், அது இன்னும் எண்ணற்ற எழுச்சிகளுக்காக என்பதைக் கண்டு கொள்வார்கள். என்னைப்போல சோவியத் புரட்சியைப் போற்றிப் பாடியவனும் இல்லை; என்னைப்போல் இரங்கற்பா பாடியவனும் இல்லை. எனினும் அமரர் ஜீவானந்தம் தோற்றுவித்த கலை இலக்கியப் பொருமன்றத்தின் பரிச்சயம் பெற்று, மகாகவி பாரதியால் உத்வேகம் பெற்ற நான், மாகாளி பராசக்தி ருஷ்ய நாட்டினில் மறுபடியும் கடைக்கண் வைப்பாள் என்று நம்புகிறேன் - நாடுகிறேன் - பாடுகிறேன்."

    மதுரையிலிருந்து பிறகு சென்னைக்கு எப்போது இடம் பெயர்ந்தீர்கள்?

    "தலைநகர் நோக்கி வரவேண்டும் என்ற விருப்பம் நெடுங்காலம் இருந்து வந்த போதிலும், எனக்கு எந்தப் பின்புலமும் இல்லாததால் சென்னைக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனினும் இதற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை. பிறகு 1988-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அருமைத் தோழர் ஜெயகாந்தன் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது அவரை நான் சந்தித்தேன். 'மதுரை உங்களுக்கு போரடிக்கவில்லையா? நாளை என்னோடு சென்னைக்கு வாருங்கள். மூப்பனார் காங்கிரஸ் தலைவராகி இருப்பதால் 'நவசக்தி' பத்திரிகையைத் தொடங்கி இருக்கிறார்கள். அதில் என்னோடு துணையாசிரியராகப் பணியாற்றுங்கள்.' என்று அழைத்தார். அடுத்த நாளே அவருடன் புறப்பட்டு சென்னை வந்தேன். அதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்து, ஏதோ ஒரு நம்பிக்கையில் என் குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வந்து விட்டேன். ஓராண்டிலேயே அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. அப்போது ஜெயகாந்தன், 'உம்மிடம் கவிதை எனும் வலிமையான ஆயுதம் இருக்கிறது. அதைக் கொண்டு திரைத்துறையிலும் ஏன் சாதிக்கக் கூடாது' என்று உற்சாகப்படுத்தினார். நான் ஒருவிதமான அடக்க முடையவன். என்னை நண்பர்கள் விரும்பி அழைத்தால் மட்டும் தான் போகும் பழக்கமுண்டு.

    சமீபத்தில் வெளிவந்த 'வியாபாரி' படத்தில் 'பாட்டும் மெட்டும் பரிணாமன்' என்று டைட்டில் வெளியானது. அதற்கு முன்பு 'ஈ' படத்தில் பாடல் எழுதினீர்கள். உண்மையில் எப்போது திரைப்பாடல் எழுதத் தொடங்கினீர்கள்? திரைப்பாடலாசிரியராக வெற்றி பெறவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

    "வருத்தம் துளியும் கிடையாது. சங்கிலிமுருகன் மதுரைக்காரர் என்பதால் அவரைச் சென்று சந்தித்தேன். அவர் இளையராஜாவிடம் என்னை அறிமுகப்படுத்தி, 'நாடோடிப் பாட்டுக்காரன்' என்ற படத்தில் தாய்மையைச் சிறப்பிக்கும் ஒரு பாடலை எழுதும் வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார். அதன் பிறகு 'நானும் இந்த ஊருதான்', 'என் பொட்டுக்குச் சொந்தக்காரன்' என்ற பத்துக்கும் எழுதினேன். எனினும் இந்தப் படங்களில் எனது தனித்துவம் உணரும்படியான வாய்ப்புகள் அமையாததால், திரையுலகம் என்னை அடையாளம் காணவில்லை. நானும் அதைப் பொருட்டாகக் கருதாமல், விலகி நின்று எப்போதும்போல் எனது இலக்கியப் பணியினைச் செய்து கொண்டிருந்தேன். இப்படி நான் முற்றாக பதினைந்து ஆண்டுகள் ஒதுங்கி விட்ட பிறகு, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் அவர்கள் என்னைத் தேடிப் பிடித்து விட்டார். 'ஈ' படத்தில் உச்சக்கட்ட காட்சிக்கான பாடலை நீங்கள்தான் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 'வாராது போல் வந்து வீழ்ந்தாயடா' என்ற பாடல் ஸ்ரீகாந்த் தேவா இசையில் படத்தில் இடம் பெற்றது. இதற்குப் பிறகு நிறைய திரைப்பாடல்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும், நான் வாய்ப்புகள், கேட்டுச் செல்லவில்லை. என்றாலும் 'ஈ' படத்திற்கு எழுதிய ஓராண்டிறகுப் பிறகு திரை இயக்குநர் சக்தி சிதம்பரம் என்னை அழைத்தார். 'ஆசைப்ட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா? என்ற உங்களது புகழ் பெற்ற பாடலை நான் தயாரிக்கும் 'வியாபாரி' படத்தில் பயன்படுத்த நினைக்கிறேன். அதன் உரிமையைத் தரமுடியுமா?' என்றார். 'இது பதினைந்து ஆண்டுகளாக முற்போக்கு மேடைகள், பள்ளி, கல்லூரி மேடைகள் என்று எங்கும் பாடப்பட்ட பாடல். இந்த பாடல் மேலும்  மக்களைச் சென்றடைவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி' என்று சொன்னேன். மறுநாளே தேவாவைச் சந்திக்க வைத்தார். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் பாடலைப் பாட, அதனைப் பதிவு செய்த தேவா அவர்கள், 'இந்த மெட்டினை துளியும் மாற்றாமல் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறேன்' என்று சொல்லி, 'பாட்டும் மெட்டும் பரிணாமன்' என்று மரியாதை தந்தார்.

    இதற்கிடையில், எனது நீண்டகால நண்பர், பி. லெனின் அவர்கள், ஜெயகாந்தனின் புகழ் பெற்ற 'ஊருக்கு நூறு பேர்' நாவலைப் படமாக்கியபோது, டைட்டில் பாடல் எழுத வைத்தார். அதையும் மறக்க முடியாது.

    உங்களின் மொத்த கவிதைகளும் தொகுப்பாக வந்திருப்பதை வாசிக்கும்போது, பரிணாமன் புரட்சிகர கவிஞர் மட்டுமல்ல; காதலை விரும்பி விரும்பி, அதை ஆத்மார்த்தமாகப் பாடியிருக்கிற கவிஞர் என்றும் தெரிய வருகிறதே?

    "உங்கள் வாசிப்புக்கு என் நன்றி! இந்த பிரபஞ்சம்  என்றும் உயிர்ப்போடு இருப்பதற்குக் காதல்தான் அடிப்படை. காதல் என்பதற்குள்ளேயே சகலமும் அடங்கிவிடுகிறது. வரலாறுகள் - அது சமூக வரலாறு, அரசியல் வரலாறு எதுவாயினும், தத்துவங்கள் எதுவாயினும், அனைத்திற்கும் அடிப்படையாக உயிர்களிடையேயான காதலே இன்னும் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. காதல் என்பது பூமிப்பந்தில் மேலும் மேலும் அழகாகிக் கொண்டே இருக்கிறது. காதல் என்பது மனித நேயத்தின் உச்சம். காற்றும் காதலும் ஒன்று. அது இல்லாத இடமில்லை. அது இல்லாமல் ஜீவனும் இல்லை.

    எனது அறுபதாண்டு கவிதா முயற்சிகளில் காதல் உணர்வு என்பது, என்னை தற்போது அழகியலின் விளிம்பு நோக்கித் தள்ளியிருக்கிறது. அதன் விளைவாக 'காதல் முதல் காதல் வரை' என்ற இருநூறு காதல் சார்ந்த புதுக்கவிதைகளை எழுதி, அது தொகுப்பாகவும் ஒலிவட்டாகவும் விரைவில் வெளிவரவுள்ளது. அதிலிருந்து ஒரு கவிதையைச் சொல்ல விரும்புகிறேன். 

   'ன்னை வரைகையில்
    என் தூரிகைகள் தேய்வதில்லை
    வளர்கின்றன
    வண்ணங்களும்
    உன் வண்ணம் பெறுவதால்
    கிண்ணங்கள் நிரம்பி வழிகின்றன
       *   *   *   *   *   *   *   *   *    *   *
    நான் உன் நிழல்தான்
    சில நேரம் உனக்கு முன்னால் நடக்கிறேன்
   சில நேரம் உனக்குப் பின்னால் வருகிறேன்

   ஆனால் முன்னப்பின்னே
   என்னைப் பார்த்ததாய்
   இன்னும் நீ
   காட்டிக் கொள்ளவே மறுக்கிறாய்

   உச்சி வெயிலின் போது
   என்னை உன் பாதங்களுக்குள்
   ஒளித்து வைத்துக் கொள்கிறாய்
  அப்போதேனும் ரசிக்கிறாயா? மிதிக்கிறாயா? 
    இப்படி முடிகிறது அந்தக் கவிதை. இதில் பல்வேறு விதமான காதலையும் அதன் ஆழங்களையும் இந்தத் தொகுப்பின் வழியே பதிவு செய்திருக்கிறேன்."

    கவிதை, பாடல், கட்சி என முழுமையாக உங்களை மடைமாற்றிய பிறகு ஜீவன உபாயத்துக்கு என்ன செய்தீர்கள்? கட்சியே உங்களைக் காப்பாற்றியதா?

    "கணக்கு வழக்கு பார்க்கிறவன் ஒருபோதும் கவிஞனாக இருக்க முடியாது. 'நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோரா திருத்தல்' என்று பொட்டில் அடித்துச் சொன்னானே பாரதி - அதுதான் எனது வாழ்க்கையும். 'கல்லை வைரமணி ஆக்கல்! செம்பை கட்டித் தங்கமெனச் செய்தல், வெறும் புல்லை நெல் என உணர்தல்' என்று பாரதி மேலும் சொல்கிறான். நான் வெறும் புல்தான். என்னை நெல்லாக்கியது பாரதியின் மணிவாசகம்.

    மதுரைக்கு அருகில் பதினெட்டு கிலோ மீட்டர் தூரமுள்ள ஒரு வறண்ட கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த வறிய குடும்பத்தில் பிறந்து, ஐந்து வயதுச் சிறுவனாக நான் இருக்கும்பொழுது மதுரை மாநகர் வருகிறோம். அப்போது குடும்பத்தின் சொத்தாக இருந்தவை சில அலுமினியத் தட்டுக்கள். ஆறுக்கு ஆறு என்கிற சிறு குடிசைத் தடுப்பில் அப்பா, அம்மா எனது இரண்டு சகோதரர்களும் தூங்க வேண்டிய கட்டாயம். அப்பாவிற்கு ஒரு ரூபாய் ஐம்பது பைசா சம்பளம். இதில் சாப்பிட்டு வளர்ந்த எனக்குத்தான் இத்தனை மகத்தான பொதுவுடமைவாதிகளையும், கலை இலக்கியவாதிகளையும், பாரதியையும், தமிழையும் தரிசிக்கக்கூடிய வாய்ப்பு - எனது பதினைந்தாவது வயதிலேயே கிடைக்கப் பெற்றது என் பெரும்பேறு. இதில் எனக்கு என்ன செய்தாலும் லாபம்தானே தவிர நஷ்டத்துக்கு என்ன இடமிருக்கிறது?

     கட்சியில் நான் இருந்தபோதும் சரி; தற்போது கட்சி அட்டையை நான் வைத்துக் கொள்ளாவிட்டாலும் சரி - மனமுவந்து ஒவ்வொரு மாநாட்டுக்கும் என்னை அழைத்துப் பாட வைக்கிறார்கள். அது ஏன்? கம்யூனிஸ்ட் லட்சியம் என்பது அட்டையை வைத்துக் கொண்டு ஆற்றுவதல்ல. கணக்குகளால் ஒரு கலைஞனை ஒருபோதும் முடக்கிவிட முடியாது."

    திராவிட இயக்கம் சார்ந்த தமிழ்க் குடும்பங்கள், இடதுசாரிச் சிந்தனையை ஏற்றுக் கொண்ட தமிழ்க் குடும்பங்கள் - இந்த இரண்டு தரப்புக்குமே சோவியத் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் பார்ககிறோம். உங்களுக்கும் இந்த தாக்கம் இருந்ததல்லவா?

    "எனது கவிதையின் செயல்பாட்டைத் திருப்பிப் போட்டதே மாக்ஸிம் கார்க்கியின் இலக்கிய கட்டுரைகள்தான். இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்ற தலைப்பில் கார்க்கி, சோவியத் எழுத்தாளர்கள் இடையே ஆற்றிய சிந்தனைச்செழிப்பான உரையை அறிஞர் ஆர். கே. கண்ணன் தமிழிலே மொழிபெயர்க்க, அதை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டது. கார்க்கி தமது வளமான வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் - மார்க்ஸிய வெளிச்சத்தில் அவரது இலக்கியச் சிந்தனைகளை முன் வைத்தது இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல; வாழ்க்கையை நேசிக்கிற யாருக்கும் உள்ளொளியைத் தரக்கூடியது. அந்த மொழிபெயர்ப்பிலே இடம் பெற்றிருந்த 'மனித ஆளுமையின் சிதைவுகள்' என்ற கட்டுரை என்னை, எனது எழுத்துகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கார்க்கியைப் படித்ததன் தொடர்ச்சியாக ஆண்டன் செகாவ், தாஸ்தயேஸ்கி, அதன் பிறகு அலெக்சாண்டர் புஷ்கின், பிறகு இலக்கிய மகாபிரபு டால்ஸ்டாய் என்று நான் வாசித்த மாபெரும் பொக்கிஷங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இன்று நவீன தமிழ் இலக்கியம் செழித்துப் பல்வேறு கிளைகளாக வளர்ந்து நிற்பதற்கு சோவியத் இலக்கிய மொழி பெயர்ப்புகள், நியூ நெஞ்சுரி புத்தக நிறுவனத்தால் ஊர்தோறும் இங்கே பரவலாகச் சென்று அடைந்தது ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்."

    உங்களுடைய இலக்கிய அனுபவத்தின் வழியே முற்போக்கு இலக்கியம் சாதித்திருப்பது என்ன என்று சொல்ல முடியுமா?

    "தகழி சிவசங்கரப் பிள்ளை, தாம் மறைவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு தொலைக் காட்சிப் பேட்டியில் பேசினார். 'மகாபாரத, ராமாயண இதிகாசங்களைத் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஆயிரக்கணக்கான கதைகள் பிறக்கின்றன" என்று அந்தப் பேட்டியில் சொன்னார். அப்படியானால் அவர் ஒரு முற்போக்கு இலக்கியவாதியாக அல்லது பிற்போக்கு இலக்கியவாதியா என்று கேட்டால், அவர் ஒரு இலக்கியவாதி. பொதுவான ஒரு அளவுகோலின்படி சிறந்த செவ்வியல் இலக்கியங்களை எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள் என்று பிரிக்கலாம். இவற்றை மீறுகிற இலக்கியங்களைப் பிற்போக்கு இலக்கியம் என்று பிரித்து விடலாம். ரித்விக் கட்டாக் என்ற மகத்தான திரை இயக்குநரின் புத்தகத்தைப் படித்தேன். அவர் செல்கிறார் : 'இந்தியாவின் மரபார்ந்த இதிகாச, புராண இலக்கியச் செல்வங்களை விட்டு என்னால் தனித்து யோசிக்க முடியாது' அப்படியானால் எதிர்ப்பது ஒன்று மட்டுமே முற்போக்கு இலக்கியம் ஆகிவிடாது. இந்திய இலக்கியத்தின் அடிப்படையான இலக்கிய செயல்பாடே முற்போக்கானதுதான் முற்போக்கோ பிற்போக்கோ இலக்கியம் வளர வளர மனித சமூகம் வளர்ந்து வந்திருக்கிறது. அது எல்லாவிதமான வளர்ச்சியையும் குறிக்கிறது. இங்கே மனிதம் வளர்கிறது என்றால் இலக்கியம் வளர்கிறது என்று அர்த்தம். மனிதம் குலைகிறது என்றால் இலக்கியம் தாழ்கிறது என்று அர்த்தம் இவ்வளவுதான் அளவுகோல்."

    ஒரு முற்போக்குக் கவிஞர், அருணகிரிநாதர் எழுதிய கந்தரநுபூதியைப் புதுக் கவிதையாக எழுதியது ஆச்சரியமளிக்கிறது. கருஞ்சட்டை சிங்கங்கள் முதுமையைத் தொட்டு நிற்கும்போது ஆன்மிகம் பேசுவது போல்தானா இதுவும்?

    "நிச்சயமாக இல்லை. நானே லயித்து செய்த அற்புதப்பணி அது. அன்பு நண்பர் பி. லெனினின் தந்தையார் அமரத்துவம் வாய்ந்த திரைக்காவியங்களை இயக்கிய பீம்சிங் என்பது யாவரும் அறிந்ததுதான் லெனின் சிறுவனாக இருக்கும்போது அவருக்கு  இசையைக் கற்றுத்தர அவரது தந்தை ஏற்பாடு செய்திருக்கிறார். அவரது தந்தை இதற்காகத் தேர்வு செய்த குரு வேலூர் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார்.  இவர் தமிழிசையிலும் வல்லவர். இவர் கந்தரநுபூதியில் உள்ள ஐம்பத்திரண்டு பாடல்களையும், அவை அமைக்கப்பட்டிருந்த ஐம்பத்திரண்டு கர்காடக சங்கீத ராகங்களோடு சொல்லிக் கொடுத்து தன்னிடம் வரும் ஒவ்வொரு மாணவனையும் தேர்ந்த பாடகனாக ஆக்கிவிடுவாராம். இவரிடம் கற்று தேர்ந்த லெனின், கந்தரநுபூதியின் கடினமான தமிழ் அவரை உறுத்தியிருக்கிறது. சம்பந்த மூர்த்தியின் புதல்வர் தக்கேசி தந்தைக்குப் பிறகு இசைப்பயிற்சி அளித்து வருவதை அறிந்த லெனின் கடந்த ஆண்டு என்னை சந்தித்தார். அப்போது, 'கந்தரநுபூதியை புதிய நடையில் - எளிய தமிழில் ஐம்பத்திரண்டு இசைப்பாடல்களாக நீங்கள் எழுதித் தர வேண்டும். இதை தக்கேசி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் அந்த ஐம்பத்திரண்டு ராகங்கள் மட்டுமல்ல; உங்கள் தமிழும் மாணவர்களைச் சென்று சேரும்' என்றார். அதை அவர் விருப்பம் போலவே செய்து முடித்தேன். அவற்றை இப்போது மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தப் பாடல்களை இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன்."

    இன்று உலகின் மிகப்பெரிய நெருக்கடி என்று எதைக் கருதுகிறீர்கள்?

    "வன்முறை! வளர்ச்சியைப் போலவே வன்முறையும் விரிந்து பரந்து வளர்ந்திருக்கிறது. வன்முறையை வன்முறையால் ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை நாம் இன்னும் உணராததால் வன்முறை மேலும் செழித்து வளர்கிறது. வன்முறை என்பது ஆயுதம் தாங்கிப் போராடுவதும், அப்படிப் போராடுபவர்களை ஆயுதங்களால் ஒடுக்குவதும் மட்டும் அல்ல. ஒவ்வொரு மனித மனதிலும் ஒளிந்துகிடக்கும் வன்முறைதான் எல்லா வன்முறைக்கும் ஆதாரமாக இருக்கிறது. இந்த வன்முறை, ஏற்றத்தாழ்வுகளால் உருவாகும் மனவெம்மையால் பிறக்கிறது. உரிமைகள் நசுக்கப்படும்போதும் பறிக்கப்படும்போதும் வருகிறது. வன்முறை என்பதை மனிதனுக்கு சம்பந்தமில்லாத, தொழில்முறை ரவுடிகளின், ஆயுதம் தாங்கிய போராளிகளின் பாற்பட்டது என்பதுபோல ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால் அது உண்மை அல்ல. வன்முறை மனித மனம் சம்பந்தபட்டது. வன்முறை காலம் காலமாகத் தொடர்வதைக் கண்டு மனித இனம் இன்னும் வெட்கித் தலை குனியாமல் இருப்பது மனமாற்றமுடைய சமூகத்தைக் காட்டுவதல்ல. மன அழுக்குகள், அழுக்காறுகளின் பிடியில் வளர்வதாலேயே வன்முறைகள் வளர்ந்து செல்கின்றன. வன்முறைக்கு அடிப்படையான அம்சமாக இருப்பது பேராசை இந்தப் பேராசையை கைவிடாவிட்டால் இயற்கை மனிதன்மீது தனது வன்முறையைத் தொடுக்கும்.

    இன்று 'இண்டஸ்ட்ரியல் ஹீட்' என்பது உலக உருண்டை வெப்ப மயமாகி வருவதற்கு முக்கிய காரணமாகி இருக்கிறது. இந்த பூமிப்பந்தை சூடாக்குவதில் அமெரிக்கா அதிக வேகம் காட்டுகிறது. இதை அந்நாடு குறைத்துக் கொண்டிருந்தால் இத்தனை புயல்களையும் வெள்ளத்தையும் அந்த நாடு சந்தித்திருக்காது என்பது உலக ஆன்மிகத்தின் குரல் மட்டுமல்ல அறிவியலாளர்களின் குரலும்கூட.  எனவே இயற்கையின் வன்முறையிலிருந்து தப்பிக்க பேராசையை மனிதர்கள் கைவிட வேண்டும். உலகமயமாக்கல், தாராளமயம் என்ற பெயரால் எளியவர்களை வலியவர்கள் சுரண்டுவதும் முதுகிலே குத்துவதும் நிறுத்தப்பட்டாக வேண்டும். உலக மயமாதல் என்பது எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்பதில் நிறைவேறினால் வன்முறை குறையும்."

    வாழ்வனுபவம் என்னும் ஆசிரியன் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கும் பரிணாமம் என்று எதைச் செல்வீர்கள்?

    "இளமை" முதலே பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர உணர்வுகளால் வளர்க்கப்ட்ட நான், இன்று புரட்சியின் பெயராலும்கூட வன்முறையோ ரத்தம் சிந்துதலோ கூடாது என்று விரும்புகிறேன்.

    மானிட உணர்ச்சிப் பிரவாகங்களும் அறிவின் நிதானங்களும் ஒருங்கிசைந்து செயல்படுவதன் மூலமே இனி உலகில் அமைதி மற்றும் முன்னேற்றங்களைச் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்.

    'அடடா இங்கேயோர் அக்டோபர் புரட்சிதான்
    அப்போதே நேர்ந்துள்ளது
    அக்டோபர் இரண்டாம் நாள்
    மகாத்மா காந்தியும் அவதாரம் செய்ததாலே'

    - என்று இன்று நான் மகாத்மா காந்தியை நன்கு கண்டுகொள்ளும் அளவுக்கு காலத்தால் பரிணாமம் பெற்றுள்ளேன்."

   
    - நேர்காணல் ஆர்.சி. ஜெயந்தன்
    படங்கள் : எஸ்.பி. சுந்தர்


•••••••••••